மாதம் ரூ.1000 உதவித்தொகை! புதுமைப்பெண் திட்டத்தால் 29% உயர்வு – உயர்கல்வித்துறை
பாலிடெக்னிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது என உயர்கல்வித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்.
தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவியரின் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 29% அதிகரித்துள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம்:
மேலும், உயர்கல்வித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், வறுமை உள்ளிட்ட காரணங்களால் படிப்பை இடை நிறுத்திய பல மாணவியர், புதுமைப்பெண் திட்டத்தால் மீண்டும் உயர் கல்வியை தொடர்ந்துள்ளனர். 2021-22 கல்வியாண்டில் 1.46 லட்சம் மாணாக்கர்களுக்கு ரூ.353.34 கோடியும், 2022-23 கல்வியாண்டில் 1,45 லட்சம் மாணாக்கர்களுக்கு ரூ.356.11 கோடியும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தொலைதூர படிப்பு:
சென்னை பல்கலைகழகங்களில் தொலைதூர படிப்பில் அடுத்தாண்டு முதல் B. Sc (Data Science), MBA (Data Analytics) தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு திறன், தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர கட்டிடங்கள்:
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட 20 அரசு கல்லூரிகளில் 10 கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை கொள்கை குறிப்பில் தெரியவந்துள்ளது. ரூ.128.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.