ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இதுவரை பேசாத முதல்வர்கள் கூட இன்றைய கூட்டத்தில் பேசியுள்ளனர். அதுவும் நேரமின்மை காரணமாக ஃபேக்ஸ் வாயிலாக பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதன்படி, ஃபேக்ஸ் வாயிலாக தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுவும், ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பிசிஆர் பரிசோதனை கருவிகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து சிறு, குறு தொழில் துறையினர் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சிறு, குறி தொழில் செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி வருமான வரி செலுத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ், அமைச்சர் உதயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.