மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் பா.ஜ.க.வுக்கு லாட்டரி மன்னன் என்ற மார்ட்டின் என்பவர் ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,பாஜக கட்சிக்கு லாட்டரி மன்னன் என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது என்றும், சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததின் பின்னணி குறித்தும், அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவு குறித்தும் மத்திய அரசு நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியிருப்பதாவது:
ரூ.24 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்கள்:
“லாட்டரி மன்னன் என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ அரசியல் பலம் மற்றும் அரசை ஏமாற்றியதன் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இவரது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் 4 நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.5.8 கோடி ரொக்கமும், ரூ.24 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களும் கைப்பற்றப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள மார்ட்டின் தொடர்புடைய 70 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
மார்ட்டினிடம் பல ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர் ஒருவர் குளம் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தந்தையின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து அவரது மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த சோதனையை வருமான வரித்துறை நடத்தியது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ட்டின் மீதும், அவரது நெருங்கிய சகாக்கள் மீதும் 30 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. சிக்கிம் அரசை ரூ.4,500 கோடி அளவுக்கு ஏமாற்றியதாகவும் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. மார்ட்டின் ஜாமீனில் வெளியே வந்தாலும், அவர் மீதான சிபிஐ வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நில மோசடி வழக்கில் மார்ட்டின் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பா.ஜ.க.வுக்கு மட்டும் 83 சதவிகிதம் நன்கொடை அம்பலம்:
இப்பேர்ப்பட்ட நபரிடம் தான் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, ரூ.100 கோடி நன்கொடையை பா.ஜ.க. பெற்றுள்ளது. புரூடண்ட் என்ற தேர்தல் நிதி அறக்கட்டளை, கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை கடந்த 20 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.
கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ.245.7 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன. இந்த தொகையில், பா.ஜ.க.வுக்கு மட்டும் 83 சதவிகிதம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது அந்த நிதி விவரத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரிச் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் பா.ஜ.க.வுக்கு மார்ட்டின் ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடண்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது.
தோலுரித்துக் காட்டியிருக்கும் நன்கொடை:
கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.க.வுக்கு தேர்தல் நன்கொடை அதிக அளவில் வழங்கப்பட்டு வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த சந்தேகம் மார்ட்டின் மூலம் உறுதியாகியிருக்கிறது. நாட்டின் உயரிய நிறுவனங்களை சுயநலத்துக்காக மோடி அரசு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல், இந்த குற்றச்சாட்டுக்கு மார்ட்டினே சாட்சியாக இருக்கிறார்.
மார்ட்டினிடம் ரூ.100 கோடி அளவுக்கு நன்கொடை பெற்றுள்ள நிலையில், அவருக்கு எத்தகைய கைமாறு செய்ய மோடி அரசு உறுதி அளித்திருக்கிறது?. அவர் மீதான வருமான வரித்துறை வழக்கு தொடருமா ? அவருக்கு எதிராக நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் என்னவாகும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இதேபோன்று, மோசடியில் ஈடுபட்டு குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய எத்தனை மார்ட்டின்கள் இந்த தேர்தல் நன்கொடைப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும். எந்த அளவுக்கு மோடி அரசு நேர்மையான ஆட்சி நடத்துகிறது?, அவர்கள் நடத்தும் வருமான வரி சோதனையின் பின்னணி என்ன? என்பதை மார்ட்டின் வழங்கிய ரூ. 100 கோடி நன்கொடையே தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
நேர்மையான விசாரணை:
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆதாயம் தேட, தங்கள் முறைகேடுகளை மூடி மறைப்பதற்கு மார்ட்டின் போன்ற பெரிய தொழிலதிபர்கள் பா.ஜ.க.வுக்கு இது போன்ற வழியில் நன்கொடை அளித்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததின் பின்னணி குறித்தும், அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவு குறித்தும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். அப்போது தான் ஆட்சி அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். எனவே, இது குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மோடி அரசை கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…