150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு -தமிழக அரசு ..!
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
தமிழக சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.
“ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1138 பள்ளிகளில் பயிலும் 83,259 மாணாக்கரின் கல்வி நலனை உறுதி செய்யும் பொருட்டும், மாணாக்கரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையிலும், 150 பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும்.”
மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ரூபாய் நூறு கோடி மதிப்பீட்டில் 29 மாவட்டங்களில் உள்ள 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு 480 புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 15 ஆய்வகக் கட்டடங்களை கட்டித் தருவதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்:104, ஆதி.(ம)ப.ந. (ஆதிந2(1)) துறை. நாள் : 07.12.2021 – ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.