இடைத்தேர்தலுக்கு ரூ.10 கோடி பேரம் பேசியது அதிமுக !புகார் கூறிய மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்
அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
ஆனால் வேட்பாளர்களாக தங்களை அறிவிக்கவில்லை என்ற ஏக்கம் ஒரு சிலருக்கு உள்ளது.அந்த வகையில் அதிமுகவில் வருகின்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இடையே மோதல் இருக்கும் காரணத்தால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் விளாத்திகுளம் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக மார்க்கண்டேயன் அறிவித்தார். அதன்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் மார்க்கண்டேயன்.
வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பிரச்சாரத்தையும் தொடக்கி வந்தார்.தூத்துக்குடியில் உள்ள பசுவந்தனையில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் அதிமுகவை கடுமையாக சாடினார்.அவர் பேசுகையில்,அதிமுக தலைமை விளாத்திகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க எனக்கு 10 கோடி ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியது. மேலும் முக்கிய பதவிகள் தருவதாகவும் பேரம் பேசியது என்று கூறினார்.. பணம் கொடுப்பதாக அவர்கள் கூறியது தொடர்பாக புகார் ஏதும் அளிக்கவில்லை.இவர் கூறியது அரசியல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மார்க்கண்டேயன் பேரம்பேசியதாக கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.