ரூ.10.10 கோடி அபராதம் ! நீதிமன்றத்தில் செலுத்திய சசிகலா..!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரூ.10.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்துள்ளது.
அபராதத்தொகை ரூ.10.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்தது. ஏற்கனவே சுதாகரன், தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா வழக்கறிஞர் ரூ.10.10 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.