கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!
கடலூர் மாவட்டத்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன்.
இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர் கடலூர் மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பறித்த சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார்.
இவரது குற்றச் செயல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. விஜய் மீது ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 4 என்கவுண்ட்டர்களை போலீசார் செய்துள்ளனர். இன்று புதுச்சேரி வழிப்பறி கொள்ளையன் விஜய், கடலூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று மதுரையிலும் மூன்று தினங்களுக்கு முன் கம்பம் பகுதியிலும் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. அதேபோல, மார்ச் 28ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.