மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!
ஈரோட்டில் ரவுடி ஜான் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நபர்களை போலீசார் என்கவுண்டர் மூலம் சுட்டுப்பிடித்துள்ளனர்.

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட கிச்சிபாளையம் பகுதி SMC காலணி பகுதியை சேர்ந்த ஜான் மீது கிச்சிபாளையம், செவ்வாய் பேட்டை பகுதியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் மனைவி, மகன், மகளோடு வசித்து வந்துள்ளார். இவர் இன்று தனது மனைவி உடன் காரில், ஒரு வழக்கு ஒன்றிற்காக அன்னதானபேட்டை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்துள்ளார்.
காவல்நிலையம் வந்துவிட்டு திரும்பி திருப்பூர் செல்கையில் ஈரோடு, நசியனூர் அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு வாகனம் ஜான் கார் மீது மோதியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த காரில் வந்த நபர்கள் காரில் இருந்த ஜானை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தடுக்க முயன்ற ஜான் மனைவி மீதும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்துள்ளார். ஜான் மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை தொடங்கினர். பவானி டிஎஸ்பி ரத்னகுமார் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று செய்திகளில் குறிப்பிடப்படும் நிலையில், அவர்கள் பதுங்கி இருந்த இடம் காவல்துறைக்கு கிடைத்து அங்கு சென்றனர்.
சித்தோடு அருகே குற்றவாளிகள் பதுங்கி இருந்ததாக அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடிக்க முயல்கையில் அவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் தலைமை காவலர் லோகநாதன் ஆகியோர் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக அவர்கள் மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது என கூறப்பட்டது.
இதில் , சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய மூன்று பேரும் காலில் சுடப்பட்டநிலையில் பிடிபட்டனர். கார்த்திகேயன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேருக்கும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீதம் உள்ள குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.