அடுத்தடுத்து பயங்கரம்! காரைக்குடியில் ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 அடி சாலை பகுதியில் ரவுடி மனோஜ் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை : தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள்என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ படுகொலை, ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் வெட்டி கொலை, சிவகங்கையில் குடும்ப தகராறில் கொலை சம்பவம் என ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
இன்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நார்த்தவாடா கிராமத்தில் பூண்டியை சேர்ந்த லோகேஷ் எனும் 19 வயது இளைஞரை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. இது குறித்து திருவிலாங்கோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து, மீண்டும் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் அருகே, ரவுடி மனோஜ் என்பவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுளளார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவர் நிபந்தனை ஜாமீன் பெயரில் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட நண்பர்கள் உடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது காரில் வந்த ஒரு மர்ம கும்பல் மனோஜை வழிமறித்து காரைக்குடி 100 அடி சாலையில் மனோஜை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. தடுக்க முயன்ற மனோஜ் நண்பர்கள் மீதும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்தார். மனோஜ் நண்பர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.