2,646 பேருக்கு சுற்றிக்கை! ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு சிவி சண்முகம் மறுப்பு!
பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தென்னரசுக்கு ஆதரவு என சிவி சண்முகம் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்தை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சமர்ப்பித்தனர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவி சண்முகம், இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தென்னரசுக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,646 பேருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதில், 2,501 பேர் ஆதரவு தந்துள்ளனர். தென்னரசுக்கு எதிராக யாரும் படிவங்கள் வழங்கவில்லை. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்தை தேர்தல் ஆணையம் ஆவண செய்வதாக எங்களிடம் கூறியுள்ளது. 145 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவங்களை அனுப்பவில்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள் வேறொரு நபரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்றும் படிவத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது என்றார். மேலும், ஆட தெரியாதவர்கள் மேடை சரியில்லை என கூறும் கதைகளை நாம் கேட்க தேவையில்லை. ஒரு வேட்பாளரை பெயர் மட்டும் பரிந்துரை செய்தததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பும் தெரிவித்தார்.