சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!
சத்திரப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் ஸ்டீஃபன் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீஃபன் மீது ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், அண்ணாமலை நகரில் சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். அந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக ஸ்டீஃபனை பிடிக்கச் சென்றபோது, அவர் போலீசாரை கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர் தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், போலீசார் அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது, சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் அம்பேத்கர், கால் முட்டியில் சுட்டுப் பிடித்தார்.
இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர், ஸ்டீஃபன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.