நாளை தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு..!
ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கொரோனா காலக்கட்டம் என்பதால் கிண்டி, ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 500 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக முதன்முறையாக பதவியேற்று நான்கு மாதங்களில் பல்வேறு தரப்பினரின் மத்தியில் பாராட்டுகளைப் பெறும் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.