ஆருத்ரா மோசடி.. நாளை விசாரணை.. திடீரென துபாயில் இருந்து சென்னை திரும்பிய ஆர்.கே சுரேஷ்!
ஆருத்ரா நிறுவன நிதி மோசடி தேசிய அளவில் கவனத்தை பெற தொடங்கியுள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளை இருந்தது. இந்த சூழலில், ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்குவதாக கூறியது.
இதனை நம்பி ஏராளமான மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம், வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் சுமார் சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்தது தெரியவந்த நிலையில், 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், 21 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜகேசர் துபாயில் கைது செய்யப்பட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.!
இதனிடையே, ஆருத்ரா நிறுவன நிதி மோசடி நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷூக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்கே சுரேஷுக்கு பலமுறை சம்மன் அனுப்பினர்.
ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்கே சுரேஷ் துபாயில் தலைமறைவானார் என தகவல் வெளியானது. இதனால், அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஆர்கே சுரேஷுக்கு எதிராக லுக்கவுட் நோட்டீசும் அனுப்பட்டது. இதை எதிர்த்து ஆர்கே சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக்கவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்கே சுரேஷ் நேற்று துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அதாவது, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஆர்.கே. சுரேஷ் துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தார்.அப்போது, அவரிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய நிலையில், மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை செல்ல குடியுரிமைத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்கே சுரேஷ் நாளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி விரசனைக்கு ஆஜராக வந்துள்ளதாக ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.