ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை!
ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓகி புயலால் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி வருவதாக தெரிவித்தார். மேலும் எத்தனை முறை ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறாது என்றும், அந்த காலம் வரப்போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார்.
இந்நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை பார்வையிடுகிறார். நாளை விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுறைக்கு வருகிறார். பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
முன்னதாக, மதுரையில் பேட்டியளித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தார்.