பால் தட்டுப்பாடு அபாயம்! சென்னை ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும், மே-17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சென்னையில், கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், 1400-க்கு மேற்பட்டோர் இந்த வைராஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை, மாதவரம் பால்பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பால்பண்ணையில், பேக்கிங் செக்சனில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பால்பண்ணையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிற நிலையில், 2 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். இதனால், பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.