உயரும் விலைவாசி ! மணமக்களுக்கு பெட்ரோல் ,வெங்காயத்தை பரிசாக கொடுத்த நண்பர்கள்
திண்டுக்கல்லில் புதுமண தம்பதிக்கு வித்தியாசமான கல்யாண பரிசாக பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயத்தை நண்பர்கள் வழங்கினார்கள்.
அண்மை காலமாக பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதே வேளையில் மறுப்புறம் வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.இது மேலும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கோவிந்தராஜ் மற்றும் வினோதினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.திருமண விழாவிற்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் மணமகனின் நண்பர்கள் பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில் புதுமண தம்பதிக்கு வித்தியாசமான முறையில் கல்யாண பரிசாக கேனில் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் சின்ன வெங்காயத்தை வழங்கினார்கள்.