“மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்க வேண்டும்” – எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்..!

Default Image

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது

இந்நிலையில்,மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஓய்வு பெறும் வாய்ப்பு:

“கடந்த அதிமுக ஆட்சியின்போது 2021-2022 இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில் அன்றைய முதலமைச்சர் விதி 110ன் கீழ் 25.2.2021 அன்று அறிவிப்பு ஒன்றைச் செய்தார். அதன் மூலம் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை அதே நாளிலேயே வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு ஆண்டு பணிபுரிந்து 60 வயதில் ஓய்வு பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களுக்கு மட்டும் மறுப்பா?

இந்த வாய்ப்பு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஒழுங்கு விதிகள் (Code of Regulations for Matriculation Schools, Tamil Nadu) விதி 18இன் கீழ் அவர்களுடைய ஓய்வு பெறும் வயது 60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட 58 வயதிலேயே அவர்கள் ஓய்வுபெறச் செய்யப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் பாதிப்பு:

அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும் நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கு அது மறுக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை G.O. (Ms) No.29 நாள் 25.02.2021 மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று ஒரு ஆணையை வெளியிட்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு உதவவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்