நாளை மாலை 7மணி முதல் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்… மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம்.!
நாளை மாலை 7 மணிக்கு பின் வாக்குப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 7 மணியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், நாளை மாலை 7 மணிக்கு பின் வாக்குப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் வெளியாகியுள்ளது. அதில், பரப்புரை முடிந்த பின் தேர்தல் தொடர்பான எந்த பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது.
தொலைக்காட்சி, எஃப்.எம்., வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் குறுந்செய்தி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனம் மூலம் பரப்புரையை வெளியிடக்கூடாது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் பரப்புரை செய்யக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறினால், சட்டப்பிரிவு 126, 2ன் படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் நாளை மாலை 7மணிக்கு பிறகு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வேட்பாளர் வேறு தொகுதி வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தாங்கும் விடுதிகள் ஆகிய இடங்கள் வெளி ஆட்கள் இருக்கிறார்களா என கண்டறியப்படும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகனம் அனுமதிகள் நாளை மாலை 7 மணி முதல் செயல்பக்கூடாது. வாக்குசாவடிக்கு 200 மீட்டர் தொலைவில் தேர்தல் நாள் பணிக்கு தற்காலிக பூத் அமைக்கலாம். தேர்தல் நாள் பணிக்கான பூத்தில் உணவு பொருட்கள் எதுவம் வழங்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை நாளை மாலை 7 மணி முதல் விதிக்கப்பட்டுள்ளது.