திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.!
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் 67 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் 3,500-க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தீர்மானம் : 1
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன், பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி, திரு. ஆ.இராசா ஆகியோர்க்கும் வரவேற்பும், வாழ்த்தும்.
தீர்மானம் : 2
பேரிடர் காலத்திலும் சீரிய முறையில் உழைக்கும் கழகத் தலைவர், கழகத் தோழர்கள், தன்னார்வலர்கள், மனிதநேயப் பண்பாளர்கள் அனைவர்க்கும் பாராட்டும் வணக்கமும்.
தீர்மானம் : 3
அருந்ததியினர் உள்ஒதுக்கீடு தொடர்பான சமூகநீதித் தீர்ப்பிற்கு வரவேற்பு.
இன்றைக்கு அருந்ததியினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு உயர்ந்த வழியாக இருந்து வரும் அந்த உள்ஒதுக்கீட்டை சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை இந்தப் பொதுக்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
தீர்மானம் : 4
மருத்துவக் கல்வியில் கழகம் நிலைநாட்டிய சமூகநீதி.
மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில், இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 5
முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் கலைஞர். அதன் படி, கலைஞர் வழங்கியிருக்கும் அந்த உள் இடஒதுக்கீடு செல்லும் என்றும், அதில் குறுக்கிட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லையென்றும், 31.8.2020 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தப் பொதுக்குழு மனமார வரவேற்று மகிழ்ச்சி கொள்கிறது.
தீர்மானம் : 6
இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் சமூக ‘அநீதி’ களைந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 7
தேசிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம்.
தேசிய கல்விக் கொள்கை 2019 குறித்து கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 14.7.2019 அன்று வல்லுநர்கள் குழு ஒன்றினை அமைத்து, அறிக்கை பெற்று, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் 28.7.2019 அன்று அளித்து, “அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாணவர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததை இந்தப் பொதுக்குழு நினைவு கூர்கிறது.
தீர்மானம் : 8
சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020-ஐக் கைவிடவேண்டும்.
புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-ஐ வெளியிட்டு – அதன்மீது ‘கருத்துக்கேட்பு’ என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்தி – அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் கூட இந்த அறிவிக்கையை வெளியிட நீதிமன்றங்களை நாட வேண்டிய பரிதாபமான நிலையை உருவாக்கி, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 9
அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.
வரலாறு காணாத வகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் மாதத்தில் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடையக் காரணமாயிருந்து, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற்றம் அடைந்து, இதுவரை இல்லாத அளவிற்கான வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி, அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நெறிகளுக்கு விரோதமாக மத்தியில் சர்வாதிகார ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 10
“ஸ்டர்லைட் ஆலை”துப்பாக்கிச்சூட்டின் பலிகளுக்கு நீதி வேண்டும்.
“ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள மிகவும் முற்போக்கான தீர்ப்பை வரவேற்கும் இந்தப் பொதுக்குழு, இத்தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் மகத்தான தீர்ப்பு என்று பெருமிதம் கொள்கிறது. ஏதுமறியாத மக்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை உரிய நியாயம் கிடைக்காதது குறித்து இந்தப் பொதுக்குழு தனது வேதனையைப் பதிவு செய்து அந்தத் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 11
கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் படுதோல்வியடைந்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க இயலாமல் ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் போதும் – நிர்வாக ரீதியாகத் தோல்வியடைந்து – மக்களுக்குப் பெரிதும் தேவையான நிதி நிவாரணம் வழங்கிட சிறிதும் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 12
மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட கழகத்தை ஆட்சிபீடம் ஏற்றிட கழகத் தலைவரை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்திட சூளுரை மேற்கொள்வோம்.
தீர்மானம் : 13
விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய – மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
மத்திய – மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைககளையும் கைவிட்டு – விளைபொருள்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும்- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும் முன்வர வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.