நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அடுத்த ஒரு வாரத்தில் இதற்கு எதிராக தீர்மானம்!
நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அடுத்த ஒரு வாரத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அன்று 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்தப்பட்ட மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அடுத்த நாள் தமிழக அரசு முதன் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 21 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தை முன்னதாக, செப்டம்பர் 13ல் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று முதல் தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அடுத்த ஒரு வாரத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதாவது, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம், பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளனர்.