குடியிருப்பு விபத்து – முன்கூட்டியே அறிந்து உயிரிழப்பை தடுத்தவருக்கு முதலமைச்சர் பாராட்டு!

Default Image

திருவொற்றியூர் குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக மக்களை அப்புறப்படுத்திய திமுக பகுதி கழக செயலாளருக்கு முதலமைச்சர் பாராட்டு.

சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென நேற்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால், D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மக்கள் விபத்துக்கு முன்தினம் இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டியிருந்தார்.

இந்த நிலையில், திருவொற்றியூர் குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக, தக்க தருணத்தில் எச்சரிக்கை செய்து அனைவரையும் வெளியேற்றி, உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தனியரசை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபிபி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், 1993 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 24 குடியிருப்புகள் நேற்று இடிந்து விழுந்தது. விபத்துக்கு முன்பு அப்பகுதிக்கு திமுக பகுதி கழக செயலாளர் தனியரசு குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதை அறிந்து மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினார்.

இதன் மூலம் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கபட்டுள்ளது என்று தெரிவித்தார். இது போன்று தான் திமுக தொண்டர்கள் செயல்பட வேண்டும் என முதல்வர் பாராட்டினார் என்றும் குறிப்பிட்டார். கட்டடம் இடிபடும் அபாயத்தை உணர்ந்து குடியிருந்தவர்களை உரிய நேரத்தில் வெளியேற வற்புறுத்தி உயிரிழப்பு தவிர்க்கப்படக் காரணமாக இருந்த திமுக பகுதிச் செயலாளருமான தனியரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்