பழைய ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி !
பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்த நோட்டுகளின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரிசர்வ் வங்கிக் கிளைகளில், ரூபாய் நோட்டுகளை சரிபார்த்து எண்ணும் 59 இயந்திரங்களின் மூலம் செல்லாத ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணி முடிக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை, துண்டுகளாக்கி அழிக்கும் பணி ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் சில நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.