நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு – தெற்கு ரயில்வே.!
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. இதனால், 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது.
இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8.10க்கு வந்தடையும். பிறகு காலை 6.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்கு பகல் 12.40க்கு வந்தடையும்.
மேலும், திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த, ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செல்லும். திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு 11.30-க்கு செங்கல்பட்டு சென்றடையும். பின்னர், செங்கல்பட்டில் இருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
அரக்கோணம், கோயம்புத்தூர் வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும். அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 2.05 மணிக்கும்,பின்னர், கோவையில் இருந்து 3.15 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்துக்கு இரவு 10 மணிக்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 சிறப்பு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.