சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி தேவை – முதல்வர் கோரிக்கை
கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்று, கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்குங்கள் என்றும் சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க ரூ.2500 கோடி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து 61 ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் அந்தந்த மாநில முதல்வர்கள் ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.