அண்ணாமலை வேட்புமனு செல்லாது என அறிவிக்க கோரிக்கை!
Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது.
இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. இந்த நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்கான ‘India Court Fee’ பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
இதனால் நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தி உள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க அதிமுக, நாம் தமிழர், திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேட்புமனு பரிசீலினையின்போதே அண்ணாமலையின் மனுவும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, நாதக உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆட்சேபம் தெரிவித்தபோதும் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டது.
கோவை தேர்தல் அதிகாரியான ஆட்சியர், அடிப்படை அம்சங்களை பரிசீலிக்காமல் அவசரமாக அண்ணாமலை மனுவை ஏற்றுள்ளார் எனவும் கூறியுள்ளனர். மேலும், அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் கோவை அதிமுகவினர் தெரிவித்துள்ளனர் .