குடியரசு தின விழா : தேசிய கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மேலே பறந்து மலர்கள் தூவின. ஆளுநர் கொடியேற்றி வைத்த இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
கொடியேற்றி வைத்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் குடியரசு தின நிகழ்வுகள், வழக்கம்போல மரியாதை மற்றும் உற்சாகத்துடன் நடைபெற்றன. குறிப்பாக, குடியரசு தினத்தை ஒட்டி சிறப்பு விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வாங்கினார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் – தீயணைப்பு வீரர் வெற்றிவேல் (சென்னை), கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் – அமீர் அம்சா (ராமநாதபுரம்), வேளாண் துறையின் சிறப்பு விருது – முருகவேல் (தேனி) என பலருக்கும் விருது வழங்கப்பட்டது.
அதன்பிறகு, சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம்பெற்ற தெலங்கானா கலைஞர்களின் மாதுரி நடனம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. மு.க.ஸ்டாலினும் அதனை பார்த்து ரசித்தார்.
மேலும், ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறையும் தேநீர் விருந்து விழா நடைபெறும் நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து அரசு சார்பில் யாரும் இந்த தேநீர் விருந்து விழாவில் பங்கேற்கமாட்டார்கள் எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.