பகுதி நேர விரைவுரையாளர்களை நீக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது! – ஓபிஎஸ்
முழு மற்றும் பகுதி நேர விரைவுரையாளர்களை நீக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் அறிக்கை.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கை என்றால் அது தனிப்பட்ட கழகத்தின் விருப்பமாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகவே அமையும் என்று நீட்டி முழக்கி 127 பக்க தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது. அதில் மிக முக்கியமான வாக்குறுதிகளை மட்டும் தலைப்புச் செய்திகளாக வாசிக்கிறேன் என்று சொல்லி பல வாக்குறுதிகளை அளித்தார் திமுக தலைவர். இந்த முக்கியமான வாக்குறுதிகளில் ‘பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்பதும் ஒன்று.
இந்த முக்கியமான வாக்குறுதி நிறைவேற்றப்படாததோடு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற மக்கள் விரோதச் செயலைச் செய்வதுதான் ‘திராவிட மாடல்’. அதாவது, சொன்னதற்கு எதிராக நடப்பது என்பதுதான் திராவிட மாடலின் தத்துவம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட 2,500 பேர் பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், முதுநிலைப் படிப்புடன் முனைவர் பட்டம் அல்லது கல்வியியல் பட்டம் போன்ற கூடுதல் தகுதியுடைய 1,311 பேர் முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக மாதம் ரூ.15,000 என 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்ததாகவும், முதற்கட்டமாக முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியிலிருந்து ஒட்டுமொத்தமாக அண்மையில் நீக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், பகுதி நேர மற்றும் தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு பணி வழங்க வேண்டாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தச் சுற்றறிக்கை பகுதி நேர விரிவுரையாளர்களையும் கவலை அடைய வைத்துள்ளது. திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் கடந்த பத்து ஆண்டு காலமாக பணியாற்றி வந்த 1,300-க்கும் மேற்பட்ட முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள், அதாவது ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது.
இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணி நீக்கத்தை எதிர்த்து நாளை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை விட்டு நீக்குவது என்பது இயற்கை நியதிக்கு முரணானது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களையும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அதிகாரிகளையும் அழைத்துப் பேசி, அவர்களுக்கு எங்கு பணி கொடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து, அனைவரையும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
‘பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என வாக்குறுதி அளித்த திமுக, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் பணியாற்றும் முழு மற்றும் பகுதி நேர விரைவுரையாளர்களை நீக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது! pic.twitter.com/ItAGEGdfyd
— O Panneerselvam (@OfficeOfOPS) October 6, 2022