நிவாரணப் பணி அலுவலர்கள், நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் – இறையன்பு..!
நிவாரணப் பணி அலுவலர்கள், நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு கூறுகையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நெருக்கடி, மனநலப் பாதிப்பு , நிதிநெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில் ஒருசில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதலமைச்சர் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேற்படிசெயல்கள் குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. மக்களின் உயிர் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாக செயல்பட வேண்டுமென்று தெரிவித்தார்.