முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்கள்! அறிமுகம் செய்த அமைச்சர்!
திருவள்ளூர் மாவட்டதில் முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
திருவள்ளூர் : சென்னையைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கு தற்போது தேங்கி இருக்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், மழை நீர் தேங்கி இருப்பதால் நேரடியாகச் சென்று வேகமாக உணவுகளை வழங்குவது சிரமம் என்பதால் ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கும் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு விநியோகம் செய்வது பற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது.
100 அடி வரை உயரம் பறக்கும் மற்றும் 10 கிலோ வரைக்கும் சுமக்கும் ட்ரோன் தயார் செய்து அதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால், சென்னைக்கு முன்பே திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் இன்று திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள குமரன் காலனியில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு, முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கினார். அதற்கான விடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மழைக்காலங்களில் மழை நீர் தேக்கத்தால் எதிர்பாராமல் வீட்டுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மொட்டை மாடிகளில் சென்று கொடுக்கும் வகையில், இப்படியான ட்ரோனை வடிவமைப்பு செய்துள்ளது பெரிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, இனிமேல் மழை நீர் தேங்கினால் அந்த இடங்களில் சிக்கி இருப்பவர்களுக்கு ட்ரோன் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள குமரன் காலனியில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு, முதல்முறையாக #ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கினோம்.#NorthEastMonsoon #TNRains @mkstalin @tnsdma pic.twitter.com/Egqg5C2B8e
— KKSSR Ramachandran (@KKSSRR_DMK) October 16, 2024