விரைவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி நிவாரண தொகை 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
குருவை பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிக்ஜாம் புயல், மக்காசோளம் பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.118.75 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் பருவமழை காலத்தில், மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெரும் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் நிகழ்ந்த பயிர் சேதங்களுக்கு ரூ.208.20 கோடி நிவாரண தொகை 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.