பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி – ஓ.பன்னீர்செல்வம்…!

பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி வழங்குவதற்கு,முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றிருக்கும் குழந்தைகளின் பெயரில் 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும் என்று ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி வழங்குவதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை:
கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றிருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சில நிவாரண உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29-5-2021 அன்று அறிவித்தார்கள். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத் துறையால் வெளியிடப்பட்டுள்ள ஆணையையும், அதன் வழிகாட்டு நெறிமுறைகளையும் பார்த்தால், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற பழமொழியைத்தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம்:
29-5-2021 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வட்டியோடு வழங்கிடவும்,அவர்களுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கவும், பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் தங்காத குழந்தைகளுக்கு பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் 18 வயது வரையில் வழங்கப்படும் என்றும், இதுகுறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ருந்தது.
இந்தச் சூழ்நிலையில், சமூக நலத் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாராவது ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தின் பொருளீட்டும் நபராக இருக்கும்பட்சத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பட்டியலில் அவர் பெயர் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி நெறிமுறைகள்:
இல்லாதபட்சத்தில், அந்தப் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாத பட்சத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பட்டியலில் அவர் சேர்க்கப்பட தகுதியுள்ளவரா என்று ஆராய்ந்து அதன் பின் அவர் பெயர் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, இறந்த தாய், தந்தை இருவருமோ அல்லது இறந்த தாயோ அல்லது தந்தையோ அரசாங்கத்திலோ அல்லது பொதுத் துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்திருந்தால், அவர்களின் குழந்தைகள் நிவாரணத் தொகை பெற தகுதியானவர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழிகாட்டி நெறிமுறைகள் பயனாளிகளை குறைப்பதற்கான வழி என்றே மக்கள் கருதுகிறார்கள்.
மேலும், குடும்பத்தில் உள்ள பொருளீட்டும் நபரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை உருவாக்குவதாக அமையும். மேலும், இந்த நிவாரண உதவி என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்று என்பதால், இதில் பெற்றோரின் வேலைவாய்ப்பினை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்காது.
அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி:
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆதரவற்ற குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தாமல், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025