கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு உதவ தயக்கம் காட்டிய உறவினர்கள்-உதவிய திருநங்கை

Default Image

கொரோனா வைரஸ் பாதித்ததால் உறவினர்கள் முன்வந்து உதவாத சூழ்நிலையில் திருநங்கை கலைக்குழுவை சேர்ந்த சமீரா எனும் திருநங்கை கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவியுள்ளார்.அந்த பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

கொரோனா வைரஸின் தீவிரம் தற்போது மிக அதிகமாக பரவி வரும் நிலையில் உறவுகள் என்ற நிலையையும் கடந்து பலர் தங்களது சொந்தப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கூட உதவ தயக்கம் காட்டுகின்றனர்.

தங்களுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் அருகில் செல்வதற்கு குடும்பத்தினரே அஞ்ச கூடிய சூழ்நிலை தற்போது பல இடங்களில் உருவாகியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவரது கணவர் வெளியூரில் உள்ள நிலையில், இவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது.ஆனால் அந்தப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதால் அவருக்கு உதவுவதற்கு அருகில் உள்ளவர்களோ அல்லது உறவினர்களோ அருகில்  செல்ல தயக்கம் காட்டியுள்ளனர்.

எனவே வெளியூரில் உள்ள அவரது கணவர் தனது மனைவிக்கு உதவ வேண்டி அவரது நண்பரான சகா கலைக்குழுவை நடத்தி வரும் சங்கர் என்பவரை தொலைபேசியில் அழைத்து கூறியுள்ளார்.அவரும் பல முயற்சிகள் மேற்கொண்டும் உதவிக்கு யாரும் முன்வரவில்லை.

அதன் பின்னர் ,சங்கர் அவர்கள் தலைமையில் இயங்கும்  திருநங்கைகளுக்கான ‘சகி’ என்ற கலைக் குழுவில் உள்ள சமீரா எனும் திருநங்கையிடம் இதுபற்றி அவர் கூறியுள்ளார்.

இதனை கேட்ட சமீரா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு துணையாக நான் இருப்பேன் என கூறி அவரது பிரசவத்திற்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.இதனையடுத்து அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 15 திருநங்கைகள் இணைந்து  ‘சகி’ என்ற பெயரில் கலைக்குழுவையும் உருவாக்கியுள்ளனர்.இவர்களுக்கு பேருதவியாய் சகா கலைக்குழுவை நடத்தி வரும் வஉசி கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சங்கர் அவர்கள் தேவையான பயிற்சிகளை கொடுத்து வருகிறார்.

இது பற்றி சமீரா கூறுகையில் நான் இந்த சகி  கலைக்குழுவில் இணைந்த பின்பு என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை கண்டுள்ளேன்.ஒரு பெண்ணின் குழந்தைப்பேறு எவ்வளவு வலி மிகுந்தது என்பதை நான் அந்த இடத்தில் உணர்ந்தேன்.நான் இந்த பெண் ஒருவருக்கு உதவி செய்ய வந்தேன்,ஆனால் இங்கு உதவி தேவைப்படக்கூடிய மற்ற நபர்களுக்கும் உதவி செய்ய ஆரம்பித்துவிட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த கொரோனா அச்சத்திற்கு மத்தியில் சகா கலைக்குழுவை சேர்ந்தவர்கள் திரு.சங்கர் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உதவிகள்  தேவைப்படக்கூடிய நபர்களை பார்த்துக்கொள்வது,அவர்களுக்கு தேவையான காபி, டீ வாங்கி கொடுப்பதும் ஆவி பிடிக்க உதவுவது போன்ற பணிகளை அச்சமின்றி மனிதநேயத்துடன் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்