அவதூறு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு..!
பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார். இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது எம்.பி. எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 24-ம் தேதி( அதாவது நாளை) ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதற்கிடையில், கடந்த 14-ஆம் தேதி பெங்களூரு புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பால் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.