பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடவேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ல் வாக்குப்பதிவு, பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் தேர்தல் விதி அமலுக்கு வந்தது. இதனை அடுத்து ஈரோடு மாவட்ட ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மணீஷ் செய்தியாளர்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி கூறினார்.
அவர் கூறுகையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பேர். இருபாலினத்தவர்கள் 37 பேர். இதர வாக்காளர்கள் 1570 பேர் ஆவார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து 3 பறக்கும் படையினர் 6 மணி நேர ஷிப்ட் கணக்கின்படி 24 மணிநேரமும் தொகுதி முழுக்க ரோந்து பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்கள், பேனர்கள் மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்தில் தனியார் அலுவலகங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் பேனர்களை மறைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 237 வாக்கு சாவடிகள் உள்ளது. ஜனவரி 10 முதல் 17வரையில் வேட்புமனுக்கள் பெறப்படும். பொங்கல் என்றாலும் வேட்புமனுக்கள் பெறப்படும். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் எடுத்து செல்வோர் அதற்கான உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். ” என்று தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் தெரிவித்துள்ளார்.