அமைச்சர் கைது : மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி.. அப்பட்டமான அடக்குமுறை.! சீமான் கண்டனம்.!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து சீமான் கூறுகையில் மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறது. இது அப்பட்டமான அடக்குமுறை என தெரிவித்துள்ளார் .
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகையில் நெஞ்சுவலி காரணமாக, தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது நடவடிக்கை பற்றி கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை மத்திய அரசு செய்யும். இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை. கொடுங்கோல் ஆட்சி என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும், தன்னிச்சையாக செயல்படவேண்டிய அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல செயல்படுகின்றன என அமலாக்கத்துறையை விமர்சித்த சீமான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வாழ்த்துகள் என தெரிவித்தார்.