மண்ணெண்ணெய், கோதுமை குறைப்பு.. ஏழை மக்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி குற்றசாட்டு!
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது என அமைச்சர் பேட்டி.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் 30 லட்சம் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என கூறினார்.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது 7536 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, தற்போது 2712 லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் முறையான பதில் இல்லை என குற்றசாட்டினார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மண்ணெண்ணெய் வைத்தே வாழ்கை நடத்துகின்றனர். இந்த சமயத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது. மத்திய அரு நடவடிக்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு வழங்கி வந்த கோதுமை ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 15,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளோம். கோதுமையை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.