ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் – நாராயணசாமி
மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு மிக பெரிய பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவைகள் கடனுதவி வழங்கி வருகிறது.
இந்நிலையில், மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இதனிடையே இந்த ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் தனி கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வீதிகளில் மக்கள் அதிக கூட்டம் அதிகமாக கூடுவதால், கடைகள் திறக்கப்படும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் வர்த்தக சபை, வணிகர் கூட்டமைப்பு, சிறு கடைகள், பெரிய கடைகள் வியாபாரிகள் அமைப்பின் தலைவர்களிடமும் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைப்பதற்கும் முழு சம்மதம் தெரிவித்தனர். இன்னும் ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு அறிவிக்கும் என கூறியுள்ளார்.