ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!
ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதிதியுள்ளார்.

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது.
இதற்கு கடந்த 8-ம் தேதி, “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது.
திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ” ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திமுக அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அதில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுக்கவே ஆளுநர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆளுநர் பதவி என்பது மத்திய மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
தமிழக அரச பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து மற்ற மாநிலங்களும் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக தன் போராட்டத்தைத் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.