மத்திய அரசின் விருது மற்றும் ரூ.15 லட்சம்;செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வு..!
மத்திய அரசின் “காயகல்ப் விருதுக்கு”,தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படை தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையை தேர்வு செய்து,ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பாக “காயகல்ப்” என்ற விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் முதல் மற்றும் 2 வது இடம் வகிக்கும் மருத்துவமனைகளுக்கு ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அடுத்த இடங்களை பிடிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆறுதல் ரொக்க பரிசுகளும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான (2020-2021) மத்திய அரசின் “காயகல்ப் விருது”,தமிழ்நாடு அளவில் சிறந்து விளங்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,முதல் பரிசாக ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளும் தொடர்ந்து ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளது.
மேலும்,விருது பெற்றது குறித்து செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது:
தமிழகத்தில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.காரணம் இங்கு வரும் நோயாளிகள்,தன்னார்வாளர்கள் சுகாதார பணிகளுக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.மேலும்,மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவு மருத்துவர்கள், பணியாளர்கள் அர்ப்பணிப்பால் தான் இந்த விருது கிடைத்துள்ளது”,என்று தெரிவித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.