ரெட் அலர்ட் தொடரும்! அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல… வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வரலாறு காணாத கன மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் சந்தித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசும், அரசு அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் இந்த 4 மாவட்டங்களில் அதி கனமழை இன்று தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தலைவர் பாலச்சந்திரன், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது. தென் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வழக்கமாக வளிமண்டல சுழற்சியால் இவ்வளவு மழை பதிவாகாது. நாள் முழுவதும் மழை பெய்துள்ளது, ஆனால், இதை மேகவெடிப்பு என கூற முடியாது.
கனமழை…. 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!
இதனால், 4 மாவட்டங்களில் பெய்தது அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல. வாய்ப்பு அடிப்படையிலேயே எச்சரிக்கை விடுக்கப்படும். எதையும் சொல்ல முடியாது. இதனால் தற்போதையை சூழலை கணித்தே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது.
தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்கள் கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது. 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம் எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.