#Red Alert: டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – வானிலை மையம்
கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதில் கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று, தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது, பரவலாக கனமழை பொழிந்து வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.