தேனி காட்டுத்தீயில் சிக்கிய 25 பேர் பத்திரமாக மீட்பு!
நேற்று தேனி மாவட்டம் அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 25 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், இருபிரிவுகளாக குரங்கணிக்குச் சென்று அங்கிருந்து கொழுக்கு மலைக்குச் சென்றனர்.
சனிக்கிழமை இரவு குரங்கணியில் தனியார் ரிசார்டுகளில் தங்கி ஓய்வெடுத்த அவர்கள், ட்ரக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்காக, கொழுக்கு மலைக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது, காற்றின் வேகத்தால், தீ பரவியதை அறியாது, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 36 பேரும், காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதையறிந்த விரைந்த வனத்துறையினர், மலைக்கிராம மக்கள், காவல்துறையினர், மீட்பு படையினர் ஆகியோர் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களை தேனி மருத்துவமனையில் பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தீயில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தேனி, போடி மற்றும் மதுரை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.