மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!
மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துள்ளார் அதனால்தான் ராஜினாமாவை வாபஸ் பெற்றேன் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அவர் தனது விலகல் முடிவை மாற்றியுள்ளார்.
அதன்பிறகு மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சற்று வேதனையுடன் மல்லை சத்யா பேசியிருந்தார். இதனையடுத்து, மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப்பெற்றுள்ளார்.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிற தகவலும் வெளிவந்திருக்கிறது. குழுக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ ” துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் மனம் விட்டுப் பேசி கட்டித் தழுவினர். துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசினார்கள். இருவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வலுப்படுத்துவோம் என்று உறுதியளித்தனர் இனிமேல் இதுபோன்ற பிரச்னைகள் நடைபெறாது என்று இருவரும் உறுதியளித்தனர்” எனவும் வைகோ பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது குறித்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ விளக்கமாக பேசினார். இது குறித்து பேசிய அவர் ” எல்லா இயக்கத்திலும் கருத்து வேறுபாடு இருப்பது என்பது இயல்பு தான் மல்லை சத்யாவின் அரசியல் பயணத்திற்கு நானும் உறுதுணையாக இருப்பேன். என்னுடைய விலகல் முடிவை திரும்பப்பெற்று மீண்டும் முதன்மை செயலாளராக தொடர்கிறேன்.
முன்னதாக மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.. அதைப்போல வருகின்ற தேர்தலில் எனக்கும் தலைவருக்கும் உறுதியாக இருப்பேன் என வாக்கு உறுதி கொடுத்திருக்கிறார் எனவே, அதனுடைய அடிப்படையில் தான் நான் ராஜினாமாவை வாபஸ் பெற்றேன். நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும், நடப்பவை நல்லதாக இருக்கட்டும்” எனவும் துரை வைகோ பேசியுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக பேசிய மல்லை சத்யா ” எனது நடவடிக்கைகள் துரை வைகோவின் மனதை காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். துரை வைகோ தொடர்ந்து முதன்மை செயலாளராக பணியாற்ற வேண்டும்” என பேசியுள்ளார்.