அனுமதிக்கப்படாத கொழுக்கு மலைக்கு சென்றதே குரங்கணி தீவிபத்தில் உயிரிழக்க காரணம்?

Default Image

பத்து பேர் உயிரிழக்க காரணம், குரங்கணி மலையில் டிரக்கிங் செல்ல அனுமதிக்கப்படாத கொழுக்கு மலைக்கு சென்றதே  என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் இருந்து டாப் ஸ்லிப் எனும் பகுதிக்கு டிரெக்கிங் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு 200 ரூபாய் வசூலித்துக் கொள்ள குரங்கணி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் இருந்து வந்த 12 பேர் தலா 200 ரூபாய் செலுத்தி சனிக்கிழமை குரங்கணியில் இருந்து டாப் ஸ்லிப் சென்றுள்ளனர்.

ஆனால் 200 ரூபாய் கட்டணத்திற்கு காலையில் புறப்பட்டு டாப்ஸ்லிப் பார்த்துவிட்டு, மாலையில் குரங்கணி திரும்பிவிட வேண்டும் என்பது விதி முறை. இந்த விதிமுறையை பின்பற்றாமல் அங்கேயே கேம்ப் அமைத்து தங்கிய ஈரோட்டில் இருந்து வந்த 12 பேர் குழு, மறுநாள் கொழுக்கு மலைக்கு சென்றுள்ளது.

சென்னையை சேர்ந்த 27 பேர் குழுவோ 200 ரூபாய் கட்டணம் கூட செலுத்தாமல்,  குரங்கணியில் இருந்து டாப்ஸ்லிப் சென்றதோடு மட்டும் அல்லாமல், கேம்ப் அமைத்து தங்கிவிட்டு மறுநாள் அனுமதிக்கப்படாத கொழுக்கு மலைக்கும் சென்றுள்ளனர். கொழுக்கு மலையில் இருந்து குரங்கணியை நோக்கி இறங்கும் போதே வனத் தீயில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குரங்கணியில் இருந்து டாப்ஸ்லிப் செல்லும் பாதையில் வனத் தீ எதுவும் இல்லை என்றும், கொழுக்கு மலைக்கு செல்லும் வழியில் தான் வனத் தீ இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அனுமதிக்கப்படாத கொழுக்கு மலைக்கு டிரெக்கிங் சென்றவர்களை கண்காணிக்கத் தவறியதாக வனவர் ஜெயசிங் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வனவர் ரஞ்சித் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் டிரெக்கிங் சென்றவர்களிடம் வனத்துறை சார்பில் பணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேனி வனச்சரகத்திற்கு மொத்தம் 129 வனவர்கள், கண்காணிப்பாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும், ஆனால் வெறும் 57 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 72 பணியிடங்கள் காலியாக இருப்பதால் வனப்பகுதியை கண்காணிப்பது என்பது கடினமாக இருப்பதாக வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். பணியில் இருக்கும் 57 பேரில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதால் அவர்களாலும் பெரிய அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியவில்லை என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலியாக உள்ள 72 பணியிடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே தேனி வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்