“தொகுதிகளை மறு சீரமைப்பது தமிழ்நாட்டிற்கு தண்டனை”..தவெக தலைவர் விஜய் கண்டனம்!

மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும் வழங்குவதே சரியான முறையாகும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

tvk vijay

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இன்று (மார்ச் 5) அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்க்கு தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. சில காட்சிகள் புறக்கணித்தாலும் அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், தவெக தலைவர் பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி. ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் “மாநிலங்களின் மக்கள் தொகை” என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
நம் அரசியல் சாசன 81ஆவது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் “சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறது (equal population representation for each MP). இதற்கு அடிப்படையான “One vote-one value” என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு.

ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும். புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

இந்நிலையில் புதிய நாளாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால், ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. ஜனநாயகக் கோட்பாடுகளை உளமாரக் காக்க விரும்பினால், ஒன்றிய அரசு கீழ்க்கண்டவற்றைத் தான் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறை, எந்த அச்சுறுத்தலும் இன்றிச் சுதந்திரமாகச் செயல்படும் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் CBL IT, ED போன்ற புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

இறுதியாக, நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை எதற்காக உள்ளது என்ற சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக லோக்சபா இருப்பது போல், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்காக ராஜ்ய சபா இருக்கிறது.

மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும் வழங்குவதே சரியான முறையாகும். அமெரிக்கா போன்ற முன்னுதாரணமான கூட்டாட்சி நாட்டில் அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் நாட்டில் மக்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்பது அடிப்படைக் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

இவற்றையெல்லாம் விடுத்து ‘equal population representation from each MF” என்ற போர்வையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறு சீரமைப்பை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

அணைத்துக்கட்சி கூட்டம் பற்றி : இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்: மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தமிழகத்தின் நலனைக் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் இந்தத் தலையாய பிரச்சனையில் தமிழ்நாட்டின் நலனுக்காக யார் இருக்கிறார்கள்: தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று Federalism எனப்படுகிற ‘கூட்டாட்சித் தத்துவ முறை”. ஆதலால் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்” எனவும் தனது அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
blue ghost mission 1
Singer Kalpana
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house