ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நீட் (NEET) தேர்வு தொடர்பாக பாஜகவுக்கு சவால் விடுத்து பேசியுள்ளார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கலந்து கொண்டு முதல் ஆளாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.
உதாரணமாக, பொங்கல் பண்டிகை போனஸ் உயர்வு,ஓய்வூதியர்களுக்கான பண்டிகை முன்பணம் உயர்வு, பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு முன்பணம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவித்தார்.
அவரை தொடர்ந்து சட்டப்பேரவையில் கலந்து கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை நீட் தேர்வுகள் குறித்து பாஜகவுக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நீட் தேர்வை காங்கிரஸ் சட்டமாக்கவில்லை, பாஜகதான் சட்டமாக கொண்டுவந்தது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது என நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன். ஆனால், அதைப்போலவே பாஜக ஆட்சியில்தான் என்று நிரூபித்தால் பாஜக ராஜினாமா செய்ய தயாரா?” என சவால் விடும் வகையில் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். செல்வப்பெருந்தகை இப்படி பேசியிருக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.