அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணி மகனுக்கு சட்டத்திற்கு புறம்பாக குவாரி குத்தகை விடப்பட்டிருப்பது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில்,இந்த விவகாரத்தில் தவறு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலகத் தயார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சக்ரபாணி மகனுக்கு, கல்குவாரி குத்தகையை வழங்கியிருக்கிறார் கனிமங்கள் வளத்துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.மேலும் அவரது அறிக்கையில், பொது ஊழியர்களின் உறவினர்களுக்குக் குத்தகைகள், ஒப்பந்தங்கள் வழங்கப்படக் கூடாது என்ற விதிக்கு முரணாக, தம் உறவினர்களுக்கே ஒப்பந்தங்களை வழங்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி போன்றோரின் முறைகேடுகளைப் போலவே, விதிகள் எதுவுமற்ற காட்டாட்சியின் இன்னொரு அத்தியாயம் இது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., திரு. சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். லைசென்ஸ் வழங்கிய துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்! லஞ்ச ஊழல் தடுப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்ட நெறிகளைப் பின்பற்றி, உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் அறிக்கை குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் டெண்டரில் பங்கேற்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை . சட்டப்புலி மு.க.ஸ்டாலின் நுனி புல் மேயக்கூடாது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மகன் கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் காட்பாடியில் கல்குவாரி ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது… அது தவறு என்றால், இது என்ன ? என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தவறு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலகத் தயார் என்று தெரிவித்துள்ளார்.