சட்டப்பேரவை தேர்தலுக்கு ரெடி! கண்டிப்பா ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் ! ரஜினிகாந்த் உறுதி
அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
அதேபோல் அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தவர் தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் எனவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் எப்போது போட்டி என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.அதில்,அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்.ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது.அதேபோல் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு மே 23-ஆம் தேதி பதில் தெரிந்துவிடும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.