விவாதத்திற்கு தயார்…மக்களே நீதிபதி, அவர்களே தீர்ப்பு வழங்கட்டும் – முதல்வர் பழனிசாமி சவால்
சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் சட்ட – ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய முதல் மாநிலம் எனவும் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? எதும் கிடையாது. நாட்டு மக்களையும் பார்க்கவில்லை, அரசாங்கத்தையும் பார்க்கவில்லை, எப்பொழுதும் வீட்டு மக்களை மட்டுமே தான் பார்க்கிறார்கள். அப்புறம் எப்படி தெரியும், நாடு எங்கே வளர்ச்சி பெறும் என குற்றசாட்டியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசு மீது பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருவதாகவும், அவர் சென்னை மேயராக இருந்தபோது எந்த பகுதியையும் கண்டுகொள்ளவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். தற்போது முக ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார், அதில் ஊழல், இதில் ஊழல் என்று கூறி வருகிறார்.
முக ஸ்டாலின் கூறிய ஊழல் புகார் குறித்து அவருடன் நேரடி விவாதம் செய்ய தயார், ஆலந்தூர் பகுதிக்கே வாங்க மேடை அமைத்து விவாதம் நடத்தலாம் என்றும், என் மீதும், அமைச்சர்கள் மீதும் குற்றம் சொன்னால், அதற்கு சரியான பதிலை நான் சொல்கிறேன் எனவும் கூறிய முதல்வர், மக்கள் தான் நீதிபதி, அவர்களே தீர்ப்பு வழங்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.