அண்ணாமலை மட்டுமல்ல, அவரது தந்தை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது – ஆர்.பி உதயகுமார்
அதிமுக தேர்தல் தயாரிப்பு குழு நாளை மக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது என்று அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவில் ஒருபக்கம் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் தயாரிப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்பி உதயகுமார், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை மக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது. இதனடிப்படையில், எப்போதும் போல சிறப்பான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். வரும் மக்களவை தேர்தல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்.
சிறுபான்மையினர் பற்றி அவதூறு.! அண்ணாமலை வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.!
இதை தொடர்ந்து, அவரிடம் அண்ணாமலை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் லேகியம் விற்பவர் போன்று பேசிகொண்டு இருக்கிறார். அரசியல் அனுபவம் இல்லை, ஒரு தேர்தலிலாவது வெற்றி பெற்றால் தான் அதன் அனுபவம் தெரியும்.
அண்ணாமலை என்ன சொல்கிறார் என்பது தமிழ்நாட்டு மக்களே புரிவது இல்லை. ஆகையால், அதிமுகவை அளிப்பதற்கு அண்ணாமலை மட்டுமல்ல, அவரது தந்தையே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். 2 கோடி தொண்டர்கள் இருக்கும் நிலையில், எந்தவிதமான எதிர்ப்புகள் மற்றும் தியாகத்துக்கு அதிமுக தயாராக உள்ளது.
நாங்கள் பதிலடி கொடுத்தால் தாங்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார். இதன்பின், ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு கூறியதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.